இருத்தலை மட்டுமே இனிமை எனக் கொண்டாடும் உலகிற்குப் பிரிவுகள் எவ்வளவு கொண்டாடப்பட வேண்டியவை என்ற புரிதல் புலப்பட வாய்ப்பில்லை. உடைந்தவை எவையும் ஒட்டுவதில்லையாம் அப்படியென்றால் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் என்று இருப்பவைகளை கொண்டாடும் உள்ளம்,ஏனோ உன்னோடே இருக்கும் உடைந்தவைகளைக் கொண்டாட உறுத்துகிறது. காலங்கள் நிற்காது கடந்து செல் என்று வரும் கருத்துகளை வந்த வேகத்தில் வாங்கி அருகில் இருக்கும் குப்பைத் தொட்டிக்கு அறிவுத் தீனி போட்டுவிட்டு ‌ அவளின் நினைவுகளுக்குள் மீண்டும் மூழ்கிப் போ! ஏனென்றால் காலங்கள் நிற்காது!வாழ்வில் நினைவுகளைத் தவிர உன்னோடு வேறு எவரும் பயணிக்கப்போவதில்லை. அவளின் நினைவுகள் உன்னை மகிழ்விக்கும் என்றால் நினைவுகளோடு வாழ் தவறேதும் இல்லை! விலகிச் சென்றவளின் மீது ஏன் இன்னும் இத்தனை காதல் என்று உன்னையே நீ வெறுப்பாய் இருப்பினும் விட்டுச் சென்ற அவளை நொடிப்பொழுதும் நேசிக்க தவறியிருக்கமாட்டாய். இரவுகள் நரகமாகும்.காதல் கவிதைகள் கசப்பாய் மாறும். அறிவுரைகளை அறவே வெறுப்பாய். நீ மட்டும்தான் உலகில் தினம் தினம் செத்துக் கொண்டிருப்பதாய் உணர்வாய்.இந்த பொம்மை மனிதர்களின் பார்வையில் நீ ஒரு பைத்தியக்காரனாய் ஆவாய்! சில நேரம் தனிமையே இனிமை என்பாய் சில நேரம் தனிமைதான் கொடுமை என்பாய்! ஊஞ்சலென மாறியிருக்கும் உந்தன் மனம்! ஆடிச் சென்றவர்கள் அடுத்த ஊஞ்சலுக்கு போனபின்பும் அவர்கள் இருப்பதாகவே நினைத்து ஆடிக் கொண்டிருக்கும் அல்லவா.யாரும் இல்லை என உணர்ந்து ஒரு கட்டத்தில் அதுவே நின்றுபோகும். நினைவுகள் எனும் காற்றால் அந்த ஊஞ்சல் நித்தமும் ஆட்டப்படலாம். அது ஊஞ்சல் இருக்கும் இடத்தைப் பொறுத்தது. கடந்த காலங்கள் எப்போதும் அழகுதான் இருப்பினும் ‌வாழும் காலங்களிலும் நினைவுகளைத் திரட்டிக் கொள்! எதிர்காலத்தில் அசைபோட அது உதவும் ‌‌அல்லவா. கால ஓட்டத்தில் கடந்து சென்றவர்களுக்கு முன்னால் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று ஒரு நொடிப்பொழுதும் வாழ முயன்று பொழுதுகளை வீணடிக்காதே! நீ நீயாக இருத்தல் மட்டும்தான் வாழ்தல்!நினைவுகளால் நிறைந்து நித்தமும் மகிழ்ந்திரு!