Surya
19 supporters
அழகர் கோயில் - தொ.ப.-வின் எழுத்துக்கள் வ ...

அழகர் கோயில் - தொ.ப.-வின் எழுத்துக்கள் வழியே ஒரு படக்கதை

Dec 09, 2021

ழகர் கோயில் மறைந்த தமிழறிஞர் தொ. பரமசிவன் அவர்களின் எழுத்து வழியேதான் எனக்கு அறிமுகம். அவரின் புத்தகத்தைப் படிக்கும்போதே அங்கு சென்று பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு அண்மையில் நிறைவேறியது. கோயிலுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் வெளியிடங்களை மட்டும் படமெடுத்தேன். தொ.ப. அவர்களின் புத்தகத்தில் அனைத்துப் படங்களையும் நான் கருப்பு வெள்ளையில்தான் பார்த்தேன். நான் சென்ற அதிகாலை வேளையில் அங்கு இயற்கையாகவே அந்தக் கருப்பு வெள்ளை நிறத் தோற்றம் கிடைத்தது. எனவே, அங்கு பார்த்தவற்றை நான் கருப்பு வெள்ளையில் அவருடைய எழுத்துக்களுடன் இங்கு பதிப்பிக்கிறேன். அவருடைய எழுத்துக்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதால் அவற்றை இங்கு பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் இத்தோடு நிறுத்தாமல் நீங்கள் அழகர் கோயில் புத்தகத்தைத் தரவிறக்கியோ வாங்கியோ படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கருப்பு வெள்ளை படங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை வண்ணப் படங்கள் கூட சில நேரம் ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. உலகின் நினைவில் நிற்கும் பல படங்கள் கருப்பு வெள்ளையிலானவை. இன்று கூட பெரும் ஆவணப் புகைப்படக் கலைஞர்கள் கருப்பு வெள்ளையையே தங்கள் முத்திரைப் பாணியாக வைத்துள்ளனர். தனிப்பட்ட அளவில் எனக்கு வண்ணப்படம் எடுக்கவே பிடிக்கும் என்றாலும், இக்கருப்பு வெள்ளைப் படக் கட்டுரையை ஒரு சோதனை முயற்சியாகவும் நுண்கலை மதிப்பிற்காகவும் (fine-art value) மக்கள் அறிஞர் தொ.ப. அவர்களுக்கான என் அஞ்சலியாகவும் செய்கிறேன். வாழ்க தொ.ப. புகழ்!

குறிப்பு: படங்களைத் தெளிவாய்க் காண உங்கள் கருவியின் வெளிச்சத்தைக் கூட்டிக் கொள்ளவும் ☀️

இரணியன்/நளமகாராஜன் கோட்டை (கிழக்குச் சுவர்)

"அழகர் கோயில் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டுள்ளது. கோயில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியன் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக்கோட்டை எனவும் வழங்கப்படுகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் உட்கோட்டையினை 'நள மகாராஜன் கோட்டை' என்று குறிப்பிடுகின்றன. இரு கோட்டைகளும் ஏறத்தாழ 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. வட பக்கத்திலுள்ள உட்கோட்டையினை விடத் தென்புறத்திலுள்ள வெளிக்கோட்டை ஏறத்தாழ நான்கு மடங்கு பெரிதாக உள்ளது. இதன் கிழக்குச் சுவரின் ஒரு பகுதி (மேலுள்ள படம்) இடிந்த நிலையிலுள்ளது." – அழகர் கோயில் நூல், பக்கம் 7-8

இரணியன் வாசல்/உட்கோட்டையின் தெற்கு வாசல்

"தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் உட்கோட்டையின் தெற்கு வாசலான இரணியன் வாசலை அடையலாம். இவ்வாசலைத் தாண்டி உள்நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானை வாகன மண்டபமாகும். (தற்போது மாங்குளம் கிராமத்தார்கள் மண்டபம் என்று எழுதப்பட்டுள்ளது) திருவிழா நாட்களில் கள்ளர் சமூகத்திற்குரியதாக இம்மண்டபம் உள்ளது. இதையும் தாண்டி வடக்கே சென்றால் இக்கோயிலின் இராஜகோபுர வாசலை அடையலாம்." – அழகர் கோயில் நூல், பக்கம் 9

இராஜ கோபுரமும் அதன் எதிரிலுள்ள குளமும்

"இராஜ கோபுர வாசலிலுள்ள கல்வெட்டுக்களில் சகம் 1435 (கி. பி. 1513) இல் எழுந்த விசயநகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே காலத்தால் முந்தியதாகும். எனவே இக்கோபுரம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இராஜ கோபுர வாசலை மக்கள் பயன்படுத்த முடியாது. எப்பொழுதும் அடைத்துக் கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச் சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன. இவையே பதினெட்டாம்படிக் கருப்பசாமியாக வழிபடப்படுகின்றன."" – அழகர் கோயில் நூல், பக்கம் 9

"பதினெட்டாம்படிச் சன்னிதிக்கெதிரிலிருந்த குளம் இருபைத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் (கி. பி. 1964) மூடப்பட்டுவிட்டது." – அழகர் கோயில் நூல், பக்கம் 14

பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில்

"பதினெட்டாம்படிச் சன்னிதிக்கெதிரில் உள்ள பதினாறுகால் மண்டபம் (படத்தில் இடப்புறம்) 'சமய மண்டபம்' அல்லது 'ஆண்டார் மண்டபம்' எனப்படும். ஆடி, சித்திரைத் திருவிழாக் காலங்களில் இக்கோயில் ஆசாரியரான ஆண்டார் இம்மண்டபத்தில் வீற்றிருப்பார். இதனையடுத்து வட புறத்தில் (படத்தில் வலப்புறம்) உள்ளது கொண்டப்ப நாயக்கர் மண்டபமாகும். சித்திரைத் திருவிழாவில் மதுரைக்குப் புறப்படும் அழகர் இம்மண்டபத்தில் எழுந்தருளி இரவு உணவை முடித்துக்கொள்வார்." – அழகர் கோயில் நூல், பக்கம் 9

"தமிழ்நாட்டுப் பெருந்தெய்வக் கோயில்களில் அழகர்கோயில் சில தனித்த நடைமுறைகளையுடையது. அவற்றுள் ஒன்று இக்கோயிலின் தலைவாசல் (ராஜகோபுர வாசல்) எப்பொழுதும் அடைக்கப்பட்டிருப்பதாகும். சிறுதெய்வங்களில் ஒன்றான பதினெட்டாம்படிக் கருப்பசாமி என்ற தெய்வம் இக்கோபுர வாசலில் உறைகின்றது. எனவே இக்கோபுர வாசல் 'பதினெட்டாம்படி வாசல்' என்றும் அழைக்கப்படுகின்றது.

சந்தனம் சாத்தப்பெறும் கதவில் உறைகின்ற தெய்வமே பதினெட்டாம்படிக் கருப்பசாமியாகும். இவருக்கு இங்கே உருவம் இல்லை இங்குப் பதினெட்டாம்படிக் கோபுரக் கதவுகளையே இத்தெய்வமாக எண்ணிப் பூஜைகள் நடக்கும்." – அழகர் கோயில் நூல், பக்கம் 227

எப்படி கருப்பசாமி அங்கு அமரலானார்

"கோயிலில் திருட வந்தவர்களைப் பிடித்து வெட்டி, கோபுர வாசற்படிக்குக் கீழ் புதைத்ததால் அவ்வாயில் தீட்டுப்பட்டது. எனவே அவ்வழியே தெய்வம் வருவது முறையன்று; மக்களும் அவ்வழியே செல்ல அஞ்சுவர். எனவே கோயில் தலைவாசல் அடைக்கப்பட்டது.

இயற்கையல்லாத முறையில் இறந்தவர்களின் ஆவி பற்றிய அச்சத்தோடுகூடிய நம்பிக்கைகளுக்காக அவ்விடத்தில் சிறுதெய்வமான கருப்பசாமி நிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். திருமாலின் சக்கரத்தாழ்வார் மட்டும் இறந்தவர் ஆவிபற்றிய அச்சத்தினையும், பகையினையும் வென்று அவ்வழியே செல்லமுடியும். எனவே சக்கரத்தாழ்வார்க்கும் மட்டும் அவ்வாசல் ஆண்டுக்கொருமுறை திறக்கப்படுகிறது.

பெரும்பாலும் மதுரையின் அரசியல் தலைமை பலவீனமடைந்திருந்த விசயரங்க சொக்கநாதன் அல்லது அவன் மனைவி மீனாட்சியின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1695-1742) இந்நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம் (என தொ.ப. அவர்கள் கல்வெட்டு பட்டயச் சான்றுகள் மூலம் நிறுவுகிறார்).

சிறுதெய்வமாக நிலைப்படுத்தப்பட்ட கருப்பசாமியை அழகர் கோயிலில் பணியாளரான உயர்சாதிப் பிராமணர்களும் ஏற்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் நாள்தோறும் அர்த்த சாமப்பூசையில் கோயில் இறைவனுக்குப் படைத்த உணவினையும், அணிவித்த மாலையினையும், கருப்பசாமிக்குக் கொண்டுவந்து படைக்கவும் பிராமணப் பணியாளர் ஒத்துக்கொத்துண்டளனர். நடைமுறையில் கோயிலுக்கும், கருப்பசாமி சன்னிதிக்குமுள்ள ஒரே தொடர்பு இதுதான்.

இத்தொடர்பினைப் பற்றிய சி.இராசகோபாலாச்சாரியாரின் (ராஜாஜி) கருத்து இங்கு நோக்கத்தக்கதாகும், "அழகர்கோயிலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பன் பற்றிய மரபுகள் ஒத்துப்போதலின் (compromise) மிகப்பெரிய சாதனையை நமக்குக் காட்டுகின்றன. நம் முன்னோர்கள் தங்கள் தகுதிநிலைக்கு (standard) மக்களை எப்படி ஈர்ப்பது என அறிந்திருந்தனர்" என்பது அவர் கருத்தாகும்.

இச்சிறுதெய்வத்தைப் பற்றிய செய்திகள், சமய இயக்கங்கள் தங்களைக் காத்துக்கொள்ள எவ்வகையில் சமூகத்தோடு ஒத்துப்போகின்றன (compromise) என்பதையே உணர்த்துவனவாக அமைகின்றன." – அழகர் கோயில் நூல், பக்கம் 227, 238 ,242 ,252.

வண்டி வாசல்

"மேற்கே இராஜகோபுர மதிலின் வட எல்லையில் அம் மதிற்சுவர் உடைக்கப்பட்டு ஒரு வாசலாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாசலுக்கு வண்டி வாசல் என்று பெயர். இவ்வாசலே மக்கள் கோயிலுக்குள் செல்லப் பயன்படுத்தும் வாசலாகும். திருவிழாக்காலங்களில் இறைவனின் பல்லக்கு, கோயிலிலிருந்து இவ்வாசல் வழியாகத்தான் வெளியே வரும்; உள்ளே செல்லும்.

வண்டி வாசல் வழியாக மேற்கு நோக்கி இராஜகோபுர மதிலின் உட்பகுதிக்கு வந்தால் மதிலின் வெளிப்பகுதியினை விட உட்பகுதி சமதளமாக்கப்பட்டிருப்பதை உணரலாம் (படத்தில் வண்டி வரும் இடம்). கோயில் மலைச்சரிவில் அமைந்துள்ளது. எனவே, இம்மதிலுக்கு வெளிப்புறப்பகுதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சரிந்ததாக உள்ளது." – அழகர் கோயில் நூல், பக்கம் 10

சிலம்பாறு/ராக்காயி அம்மன் கோயில்/பழமுதிர்சோலை செல்லும் வழி

"கோயிலின் வடபுறத்தில் மலை மீது செல்லும் சிறுபாதையில் இரண்டுகல் தொலைவு சென்றால் மலைமீது 'மாதவி மண்டபம்' என்ற பெயருள்ள ஒரு மண்டபம் உள்ளது. ஐப்பசி மாதம் தலையருவித் திருவிழாவில் இக்கோயில் இறைவன் அம்மண்டபத்திற்குச் சென்று மலைமீதிருந்து வரும் சிலம்பாற்றில் (நூபுர கங்கை என்றும் அழைக்கப்படுகிறது) நீராடுவார்." – அழகர் கோயில் நூல், பக்கம் 14

"ராக்காயி அம்மன் அழகர்மலை சிலம்பாற்றின் கரையிலுள்ள ஒரு சிறுதெய்வமாகும். ராக்காயி வர்ணிப்பு எனும் பாடல் ராக்காயி தன் குழந்தைகளுடன் தன் தமையனான பதினெட்டாம்படி கருப்பனைப் பார்க்க வரும் நிகழ்ச்சியை மட்டும் விரித்துப் பாடுகிறது. கருப்பசாமி அவளுக்குக் காட்சி கொடுக்கிறார். 'ஜெகநாதன் தங்கச்சி' என வர்ணிப்புப் பாடல் அவளைத் திருமாலுக்கும் தங்கையாகக் குறிப்பிடுகிறது. கள ஆய்வில் கிடைத்த இவ்வர்ணிப்புப் பாடல் அச்சிடப்படாததேயாகும்." – அழகர் கோயில் நூல், பக்கம் 185

ராயகோபுரம்

"வசந்த மண்டபத்திற்குக் கிழக்கே சற்று தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் பாதியிலேயே நின்றுபோன ஒரு கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசயநகர மன்னர்களின் ஆரவீடு வம்சத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டின் காலம் சகம் 1468 (கி. பி. 1546) ஆம் ஆண்டாகும். எனவே, கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றுப் பாதியிலே நின்றுபோன இக்கோபுரத் திருப்பணியைப் பின்வந்த மன்னர்களும் நிறைவுசெய்ய முடியாமல் போய்விட்டனர் என்பதையறியலாம். இக்கோபுரத்துக்கு 'ராயகோபுரம்' என்பது பெயராகும்." – அழகர் கோயில் நூல், பக்கம் 14

தொடரும்...

ஒரு சில மணி நேரத்தில் அறிஞர் தொ.ப. அவர்கள் கூறிய அனைத்தையும் கூர்ந்து நோக்கி அழகர்கோயிலைச் சுற்றிப் பார்ப்பது என்பது இயலாத காரியம். எனவே, மீண்டும் ஒரு முறை கையில் தொ.ப. அவர்களின் புத்தகத்துடன் ஒவ்வொரு இடத்தையும் ஒவ்வொரு நிகழ்வையும் திருவிழாவின் ஒவ்வொரு பகுதியையும் படங்கள் வழியே ஆவணப் படுத்த வேண்டும் என்பது எனது பெருங்கனவு.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்.

இந்தத் தளத்தில் பெரும்பான்மையாக அனைவரும் படிக்கத்தக்க வகையில் இலவசப் பதிவுகள்தான் வரும். ஆனால், எனக்கு ஆதரவளிக்க சிறு நன்கொடை (75 அல்லது 220 அல்லது 370 INR) அளிப்போருக்கு நீங்கள் மட்டும் படிக்கும் வகையில் சில பதிவுகளும் இடப்பட்டு உங்களின் மின்னஞ்சலுக்கு நேரடியாகப் பகிரப்படும். நன்றி.

Most of the photo stories will be open for everyone to read. If you donate a small amount (1 or 3 or 5 USD) to support me, you will be able to access posts here and in your email that only you can read. Thank you.

Enjoy this post?

Buy Surya a coffee

More from Surya